< Back
தேசிய செய்திகள்
எடியூரப்பாவின் 50 ஆண்டுகால அரசியல் பயணம் முடிவுக்கு வந்தது
தேசிய செய்திகள்

எடியூரப்பாவின் 50 ஆண்டுகால அரசியல் பயணம் முடிவுக்கு வந்தது

தினத்தந்தி
|
22 July 2022 7:58 PM GMT

பா.ஜனதாவின் மூத்த தலைவரான எடியூரப்பாவின் 50 ஆண்டு கால தேர்தல் அரசியல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

பெங்களூரு:

பா.ஜனதாவின் மூத்த தலைவரான எடியூரப்பாவின் 50 ஆண்டு கால தேர்தல் அரசியல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

சிறைக்கு சென்றார்

கர்நாடக அரசியலில் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவர் எடியூரப்பா. பா.ஜனதா வட இந்திய மாநிலங்களில் மட்டுமே கோலோச்சி வந்த காலக்கட்டத்தில் தென்இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு எடியூரப்பா பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினார். இது அப்போது அக்கட்சியின் பலம் வாய்ந்த தலைவர்களாக திகழ்ந்த வாஜ்பாய், அத்வானி போன்றோருக்கு பெரும் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் அளித்தது.

சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எடியூரப்பா 3½ ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடித்தார். மந்திரி பதவி கேட்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி போர்க்கொடி தூக்கியதால் அவர் ஆட்சியை நடத்த பெரும் சவால்களை சந்தித்தார். நில முறைகேடு, கனிம வளங்கள் முறைகேடு என ஊழல் புகார்களின் சுழலில் சிக்கிய அவர் பதவியை இழந்து சிறைக்கும் சென்றார். அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது, எடியூரப்பாவின் முடிவே கட்சி மேலிடத்தின் முடிவாக இருந்தது. கர்நாடக பா.ஜனதாவிலோ அல்லது ஆட்சியிலோ யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதை எடியூரப்பாவின் தீர்மானமே இறுதியாக இருந்தது. எடியூரப்பா தான் பா.ஜனதா மேலிடம் என்ற நிலை இருந்தது.

கர்நாடக ஜனதா கட்சி

அவர் முதல்-மந்திரி பதவியை இழந்த பிறகும் அவர் கை காட்டியவருக்கே முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதாவது சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டரை அவர் தான் முதல்-மந்திரி ஆக்கினார். ஆனால் ஊழல் புகார்களில் பா.ஜனதா மேலிடம் அதிருப்தியில் இருந்ததை அடுத்து எடியூரப்பா ஓரங்கட்டப்பட்டார். இதையடுத்து அவர் அக்கட்சியை விட்டு விலகி 2012-ம் ஆண்டு கர்நாடக ஜனதா என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார்.

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டது. ஆனால் அவர் எதிா்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 10 சதவீத வாக்குகள் கிடைத்தாலும் 6 இடங்களில் மட்டுமே அவரது கட்சி வெற்றி பெற்றது. அதே நேரத்தில் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு எடியூரப்பா தனிக்கட்சி தொடங்கி தனித்து போட்டியிட்டதே காரணம் ஆகும்.

அரசியல் மாற்றங்கள்

எடியூரப்பா விலகிய பிறகு கட்சியை வழிநடத்த அவருக்கு இணையான ஒரு தலைவர் இல்லாமல் பா.ஜனதா தடுமாறியது. அதே நேரத்தில் எடியூரப்பாவும் பா.ஜனதாவுக்கு திரும்புவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உணர்ந்தார். இதையடுத்து எடியூரப்பா கர்நாடக ஜனதாவை கலைத்துவிட்டு மீண்டும் தாய் கட்சிக்கு திரும்பினார். இதன் மூலம் பா.ஜனதா மீண்டும் பலம் பெற்றது. சித்தராமையா ஆட்சிக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை நடத்தினார்.

2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அப்போது எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றாலும், தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் அவர் மூன்றே நாட்களில் அந்த பதவியை இழந்தார். காலப்போக்கில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களால் அவர் மீண்டும் கடந்த 2019-ம் ஆண்டு முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 2 ஆண்டுகள் அவர் பதவியில் இருந்த நிலையில் வயது மூப்பு காரணமாக முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா துறந்தார்.

போட்டியிட மாட்டேன்

இந்த நிலையில் எடியூரப்பாவுக்கு 80 வயது ஆகிறது. பா.ஜனதாவில் தீவிர அரசியலில் நீடிக்க வயது வரம்பு 75 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் செல்வாக்கு காரணமாகவும், பெரும்பான்மை சமூகமான லிங்காயத் சமூகத்தை சேர்ந்த முன்னணி தலைவராகவும் இருந்ததால் அந்த வயது வரம்பையும் மீறி 2 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் நீடிக்க அவருக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கா்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் எடியூரப்பா போட்டியிட மாட்டார் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று எடியூரப்பா அறிவித்துள்ளார். தனது சிகாரிப்புரா தொகுதியில் மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என்றும், அவருக்கு மக்கள் தன்னை போலவே ஆதரவு அளித்து அரவணைக்க வேண்டும் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் எடியூரப்பாவின் 50 ஆண்டு கால கர்நாடக அரசியல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

எத்தனை முறை போட்டி?

எடியூரப்பா முதல் முறையாக 1972-ம் ஆண்டு சிகாரிப்புரா பட்டண பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்து எடுக்கப்பட்டார். 1975-ம் ஆண்டு அந்த அதே பட்டண பஞ்சாயத்து தலைவராக நியமிக்கப்பட்டார். 1983-ம் ஆண்டு முதல் முறையாக கர்நாடக சட்டசபை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அந்த தொகுதியில் அவர் இதுவரை 6 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ளார். 1999-ம் ஆண்டு அவர் சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து மேல்-சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கடந்த 2006-ம் ஆண்டு பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில் எடியூரப்பா துணை முதல்-மந்திரியாக பணியாற்றினார். 2007-ம் ஆண்டு அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றாலும் ஜனதா தளம் (எஸ்) ஒத்துழைக்காததால் ஒரே வாரத்தில் அவர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் 4 முறை முதல்-மந்திரியாக பணியாற்றினார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் செயல்பட்டார். அவரது இந்த 50 ஆண்டுகால நீண்ட நெடிய அரசியல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் செய்திகள்