'புதிய விமான நிலையத்திற்கு எனது பெயரை சூட்ட வேண்டாம்'; முதல்-மந்திரியிடம், எடியூரப்பா கோரிக்கை
|சிவமொக்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு தனது பெயரை சூட்ட வேண்டாம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம், எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:
சிவமொக்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு தனது பெயரை சூட்ட வேண்டாம் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம், எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி
கர்நாடகத்தின் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆவார். அவரது ஆட்சியின்போது பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் மிகமுக்கியமானது சிவமொக்காவில் தற்போது கட்டமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையம் ஆகும். அவரது அயராத முயற்சியால் சிவமொக்காவில் புதிய விமான நிலையம் நிறுவப்பட உள்ளது. விரைவில் அந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
விமான நிலையத்தை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று பிரதமரும் வருகை தருவதாக உறுதியளித்தார். அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சிவமொக்கா விமான நிலையத்திற்கு எடியூரப்பாவின் பெயரை சூட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு அனுப்பி உள்ளது. இந்த நிலையில் விமான நிலைய பணிகள் குறித்து எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
எனது பெயர் வேண்டாம்
அப்போது அவர் கூறுகையில், 'சிவமொக்கா விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த விழாவில் 3 லட்சம் பேர் வரை கலந்து கொள்ள உள்ளனர். எங்களது வளர்ச்சி பணிகள் இதோடு முடிந்துவிடாது. கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளும். வி.ஐ.எஸ்.எல். தொழிற்சாலையை நிர்வகிக்க வேண்டிய அனைத்து பணிகளையும் அரசு எடுக்கும்.
புதிய விமான நிலையத்திற்கு எனது பெயரை சூட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. எனது பெயரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டாம். மாறாக நாட்டுக்காக உழைத்தர்களின் பெயரை சூட்டினால் பொருத்தமாக இருக்கும். இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பரிசீலனை செய்ய வேண்டும்' என்று கூறி கோரிக்கை வைத்துள்ளார்.