< Back
தேசிய செய்திகள்
சட்டவிரோதமாக அரசு நிலத்தை விடுவித்த வழக்கு: பெங்களூரு கோர்ட்டில் எடியூரப்பா ஆஜர்
தேசிய செய்திகள்

சட்டவிரோதமாக அரசு நிலத்தை விடுவித்த வழக்கு: பெங்களூரு கோர்ட்டில் எடியூரப்பா ஆஜர்

தினத்தந்தி
|
18 Jun 2022 1:49 AM IST

சட்டவிரோதமாக அரசு நிலத்தை விடுவித்த வழக்கில் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று எடியூரப்பா விசாரணைக்கு ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு எடியூரப்பா சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பெங்களூரு

சட்டவிரோதமாக அரசு நிலத்தை விடுவித்த வழக்கில் பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் நேற்று எடியூரப்பா விசாரணைக்கு ஆஜரானார். அப்போது இந்த வழக்கில் இருந்து ஜாமீன் கேட்டு எடியூரப்பா சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசு நிலம் விடுவிப்பு

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த 2006-ம் ஆண்டு பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக பணியாற்றினார். அப்போது பெல்லந்தூர், தேவர பீசனஹள்ளி, கரியம்மன அக்ரஹாரா, அமானி பெல்லந்தூர் பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க கர்நாடக அரசு 434 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. இந்த நிலையில் பெல்லந்தூர், தேவர பீசனஹள்ளியில் அரசு கையகப்படுத்திய நிலத்தில் இருந்து 15 ஏக்கர் மற்றும் 30 குவிண்டால் நிலத்தை எடியூரப்பா சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து கடந்த 2013-ம் ஆண்டு வாசுதேவ ரெட்டி என்பவர் எடியூரப்பா, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆர்.வி.தேஷ்பாண்டே உள்ளிட்ட சிலர் மீது பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் புகார் மனுவை தாக்கல் செய்தார். இந்த புகார் மனுவின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக எடியூரப்பாவுக்கு கோர்ட்டு நோட்டீசும் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் நிலத்தை விடுவித்தது குறித்து விசாரணை நடத்திய லோக் அயுக்தா போலீசார் எடியூரப்பா குற்றமற்றவர் என்று கோர்ட்டில் பி அறிக்கை தாக்கல் செய்தனர்.

எடியூரப்பா ஆஜர்

ஆனால் அந்த அறிக்கையை கோர்ட்டு நிராகரித்து இருந்தது. இதற்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு ஆர்.வி.தேஷ்பாண்டே மீது பதிவான வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் எடியூரப்பா மீது ஊழல் தடுப்பு சட்டம் 1988 பிரிவு 13 (1) டி மற்றும் 13 (2) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் வழக்கின் விசாரணை இன்னும் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையில் எடியூரப்பா ஆஜரானார்.

அப்போது எடியூரப்பாவின் வக்கீல் சி.வி.நாகேஷ் இந்த வழக்கில் இருந்து எடியூரப்பாவுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது வாசுதேவரெட்டி சார்பில் ஆஜரான வக்கீல் எடியூரப்பா சார்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம் கேட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயந்த்குமார், வழக்கு விசாரணையை இன்று (சனிக்கிழமை) ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்