கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் 12-ந் தேதிக்கு முன்பே தேர்தல்; எடியூரப்பா பேச்சால் பரபரப்பு
|கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் 12-ந் தேதிக்கு முன்பு தேர்தல் நடைபெறும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் 12-ந் தேதிக்கு முன்பு தேர்தல் நடைபெறும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
யாராலும் தடுக்க முடியாது
கர்நாடக பா.ஜனதா கட்சியின் சிறப்பு மாநில செயற்குழு கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் உயர்நிலை குழு உறுப்பினருமான எடியூரப்பா கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 10 அல்லது 12-ந் தேதிக்கு முன்னதாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா 140 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் தாங்கள் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் தனித்தனியாக யாத்திரையை தொடங்கியுள்ளனர்.
பிரதமர் மோடி
ராகுல் காந்தி உங்கள் தலைவரா?. எங்கள் கட்சியின் வலுவான தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார். அவரை உலகம் முழுவதும் உள்ள மக்கள் நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள். அதனால் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் தலைமையில் கர்நாடகம் உள்பட வருகிற அனைத்து தேர்தல்களிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
கர்நாடகத்தில் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களின் பயனை பெறாத ஒரு வீடு கூட இருக்காது. வருகிற 17-ந் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இன்னும் பல்வேறு விதமான மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. நாங்கள் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மகளிர் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம்.
பஸ் யாத்திரை
நமது கட்சியினர் மத்திய-மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். இதை நீங்கள் செய்தால், நமது கட்சி 130 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் தலைவர்கள் பஸ் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் பஸ் பஞ்சர் ஆவது உறுதி. காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பா.ஜனதாவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. அதிகாரம், பணம், படை பலம், மது, சாதி, மதம், வெறுப்புகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த காங்கிரசின் நாட்கள் முடிந்துவிட்டது. அது தற்போது எடுபடாது.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
பரபரப்பு
கர்நாடக சட்டசபைக்கு வழக்கமாக மே மாதம் முதல் அல்லது 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெறும். ஆனால் எடியூரப்பா, அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஏப்ரல் 12-ந் தேதிக்கு முன் தேர்தல் நடைபெறும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. எடியூரப்பாவின் இந்த தேர்தல் தேதி குறித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.