சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிரான ரிட் மனு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
|சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு எதிரான ரிட் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
புது டெல்லி,
சென்னையை சேர்ந்த வக்கீல் பி.ஜெகநாத் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சென்னையில் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்து மதம், சனாதன தர்மத்தை குறி வைத்து, தகாத முறையில் பேசி, அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு உள்ளது.
சனாதனத்தை டெங்கு மலேரியாவை போல ஒழிக்க வேண்டுமென தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்தின் 25,26 பிரிவுகள் மீறப்பட்டது, முரணானது என அறிவிக்க வேண்டும்.
சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு தமிழீழ விடுதலை புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்பு நிதி வழங்கியதா என்பதை சி.பி.ஐ. விசாரிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சி.பி.ஐ.க்கும் உத்தரவிட வேண்டும்"
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிக்கிறது.