தேசிய அளவிலான குஸ்தி போட்டியில் நேபாள வீரருக்கு முதல் பரிசு
|பெலகாவியில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த தேசிய அளவிலான குஸ்தி போட்டியில் நேபாள வீரர் முதல் பரிசு பெற்றார். இந்த போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
பெலகாவி:
பெலகாவியில் கோவில் திருவிழாவையொட்டி நடந்த தேசிய அளவிலான குஸ்தி போட்டியில் நேபாள வீரர் முதல் பரிசு பெற்றார். இந்த போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
கோவில் திருவிழா
பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா சிரகம்வா கிராமத்தில் புகழ்பெற்ற பசவேஸ்வரா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் கோவில் திருவிழா தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. இந்த நிலையில், பசவேஸ்வரா கோவில் திருவிழாவையொட்டி தேசிய அளவிலான குஸ்தி போட்டியை நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி கோவில் அருகே குஸ்தி மைதானமும் அமைக்கப்பட்டது. மேலும் தேசிய அளவிலான குஸ்தி வீரர்களுக்கு இந்த போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
குஸ்தி போட்டி
அதன்படி சிரகம்வா கிராமத்தில் நேற்று முன்தினம் குஸ்தி போட்டி நடந்தது. இதில் கர்நாடகம் மட்டுமின்றி மராட்டியம், இமாசலபிரதேசம், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான குஸ்தி வீரர்கள் கலந்துகொண்டனர். நேற்று முன்தினம் மதியம் தொடங்கிய இந்த குஸ்தி போட்டி இரவு 10 மணி வரை நடந்தது. இந்த போட்டியை காண மைதானத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். குஸ்தி வீரர்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டனர். அவர்களை சுற்றி இருந்த மக்கள் கைதட்டியும், ஆரவாரம் செய்தும் உற்சாகப்படுத்தினர்.
இதில் இறுதி போட்டியில் நேபாளத்தை சேர்ந்த தேவதபால் என்பவரும், இமாசலபிரதேசத்தை சேர்ந்த நவீன் என்பவரும் மல்லுக்கட்டினர்.
நேபாளத்தை சேர்ந்தவர் வெற்றி
பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் நேபாளத்தை சேர்ந்த தேவதபால் என்பவர் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றார். கோவில் நிர்வாகம் நடத்திய இந்த குஸ்தி போட்டி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த குஸ்தி போட்டியையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.