< Back
தேசிய செய்திகள்
போலீசாரின் விசாரணை முடியும் வரை மல்யுத்த வீராங்கனைகள் காத்திருக்க வேண்டும் - அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

'போலீசாரின் விசாரணை முடியும் வரை மல்யுத்த வீராங்கனைகள் காத்திருக்க வேண்டும்' - அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
31 May 2023 10:45 PM IST

மல்யுத்த வீராங்கனைகளின் வாக்குமூலத்தின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி, அவரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே நாடாளுமன்றம் நோக்கிய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணி நடத்திய போது, டெல்லி போலீசார் அவர்களை கைது செய்து இழுத்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு உலக மல்யுத்த சம்மேளனம் கண்டனம் வெளியிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப் போவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர். பின்னர், விவசாய சங்க தலைவர் திகாயத் தலையிட்டு, 5 நாள் காத்திருக்கும்படி அவர்களிடம் கேட்டு கொண்டார்.

இந்நிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் குறித்து மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

"இந்த போராட்டத்தில் அரசியல் நோக்கம் இல்லை என்றும், எந்த அரசியல் கட்சியும் போராட்டத்தில் கலந்து கொள்வதை நாங்கள் விரும்பவில்லை என்றும் மல்யுத்த வீரர்கள் ஜனவரியில் கூறியிருந்தனர். ஆனால் பின்னர், கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. அதைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

ஆனால் இதை நான் சொல்கிறேன், டெல்லி போலீஸ் விசாரணைக்காக காத்திருங்கள். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த வாக்குமூலத்தின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை நீங்கள் உங்கள் விளையாட்டுக்கும், உங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் மட்டுமே அது சரியாக இருக்கும்.

நாம் அனைவரும் விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அவர்கள் முன்னேற வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நாட்டில் விளையாட்டுத்துறை முன்னேறியுள்ளது. விளையாட்டுத்துறைக்கான பட்ஜெட் மட்டுமல்ல, அதன் சாதனைகளும் அதிகரித்துள்ளது" என்று அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்