மல்யுத்த வீரர்கள் பயன்படுத்தப்பட்டு, தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் - பபிதா போகத் சாடல்
|மல்யுத்த வீரர்கள் பயன்படுத்தப்பட்டு, தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று பபிதா போகத் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவரை கைது செய்ய கோரி மல்யுத்த வீரர் - வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களுக்கு எதிர்க்கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதற்கிடையே ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்- வீராங்கனைகள் அறிவித்தனர். பின்னர் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகைத் சமாதானப்படுத்தி 5 நாட்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் இதுகுறித்து ஒலிம்பிக் வீராங்கனையும் பாஜக தலைவருமான பபிதா போகத் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க அரசால் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் உறுப்பினரான பபிதா போகத், மல்யுத்த வீரர்கள் பயன்படுத்தப்பட்டு தவறாக வழிநடத்தப்பட்டதாகக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
"ஒரு விதத்தில், மல்யுத்த வீரர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். நான் அங்கு இருந்திருந்தால், அவர்களின் கால்களைத் தொட நேர்ந்தாலும், இதுபோன்ற ஒன்றை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டேன். இது போன்ற சம்பவம் நடந்ததில் நான் வருத்தப்படுகிறேன். மல்யுத்த வீரர்களிடம் அவர்களின் பதக்கங்களை நீரில் மூழ்கடிக்குமாறு கூறியவர்கள் அதை அவர்களின் நன்மைக்காக செய்யவில்லை. அவர்கள் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இல்லை, மாறாக அவர்களுக்கு எதிராக உள்ளனர்" என்று கூறினார்.
எதிர்க்கட்சியை சாடிய பபிதா போகத், "மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்படும்போது எதிர்க்கட்சிகள் எங்கு சென்றன என்று நான் கேட்க விரும்புகிறேன். அவர்கள் மல்யுத்த வீரர்களை தவறாக வழிநடத்தி, அவர்களை போலீசார் கைது செய்யும் போது தப்பி ஓடிவிட்டனர்" என்று கூறினார். மேலும் சிறப்புக் குழுவின் விசாரணையை தீவிரத்துடன் அரசு கண்காணித்து வருவதாகவும் மல்யுத்த வீரர்களின் அனைத்து சரியான கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.