விவசாயிகள் போராட்டத்தில் நேரில் கலந்து கொண்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
|மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விவசாயிகள் போராட்டத்தில் நேரில் கலந்து கொண்டார்.
பாட்டியாலா,
பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும் வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு தெரிவித்தது. தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பஞ்சாப் - அரியானாவின் ஷம்பு எல்லையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடங்கி இன்றுடன் 200 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி அங்கு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார்.
அப்போது அவருக்கு விவசாயிகள் சார்பாக வாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.