கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை பிரதமர் அலுவலகம் அருகே கடமை பாதையில் வைத்து சென்ற மல்யுத்த வீராங்கனை...!
|மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பிரதமர் அலுவலகம் நோக்கி நடந்து சென்றார்.
டெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து பிரிஜ் பூஷண் சரண் சிங் விலகினார்.
இதனை தொடந்து நடைபெற்ற இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷணின் ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றிபெற்று புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படார். புதிய தலைவர் தேர்ந்தெடுக்கபப்ட்டபோதும் மல்யுத்த சம்மேளத்தில் தனது ஆதிக்கம் தொடரும் என பிரிஜ் பூஷண் தெரிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.
இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் இந்திய மல்யுத்த சங்கத்தை இடைநீக்கம் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்திய மல்யுத்த சங்கத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் குழு அமைக்க உள்ளது. ஆனாலும், பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்காததால் தனக்கு வழங்கிய விருதுகளை திரும்ப ஒப்படைப்பதாக ஆசிய கோப்பை மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற வினேஷ் போகத் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இன்று பிரதமர் அலுவலகத்திற்கு நடந்து சென்றார். ஜனாதிபதி மாளிகை - இந்தியா கேட் இடையேயான கடமை பாதை வழியாக பிரதமர் அலுவலகம் நோக்கி வினேஷ் போகத் நடந்து சென்றார்.
அப்போது, வினேஷ் போகத்தை இடைமறித்த டெல்லி போலீசார் அவரை பிரதமர் அலுவலகம் நோக்கி செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தனக்கு மத்திய அரசு வழங்கிய கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருதுகளை கடமை பாதை சாலையிலேயே வைத்துவிட்டு திரும்பிச்சென்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.