< Back
தேசிய செய்திகள்
பெருகிவரும் இந்தியாவின் கடன், வேலையில்லா திண்டாட்டம் பற்றி கவலைப்படுங்கள் - நிர்மலா சீதாராமனுக்கு கபில்சிபல் அறிவுறுத்தல்
தேசிய செய்திகள்

பெருகிவரும் இந்தியாவின் கடன், வேலையில்லா திண்டாட்டம் பற்றி கவலைப்படுங்கள் - நிர்மலா சீதாராமனுக்கு கபில்சிபல் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
24 Dec 2023 5:50 AM IST

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதற்கு பதிலாக பசி, வறுமை குறித்து கவலைப்படுமாறு நிர்மலா சீதாராமனுக்கு கபில்சிபல் அறிவுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றிருந்ததை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விமர்சித்து இருந்தார். மாநிலத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்டபோது, என் மண், என் மக்கள் என இங்கே இருந்திருக்க வேண்டாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

தொடர்ந்து தமிழகத்தின் வெள்ள பாதிப்பை பேரிடராக அறிவிப்பது மற்றும் பேரிடர் நிதியை தேவையான அளவு ஒதுக்குவதில் மத்திய அரசு, பாராமுகம் காட்டுவதாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் முயற்சியில் அவர் தமிழக முதல்-அமைச்சரை சாடினார்.

இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் இந்த விமர்சனத்தை முன்னாள் மத்திய மந்திரியும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல் குறை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், 'தமிழகத்தில் மழை, வெள்ளம் ஏற்பட்டிருந்தபோது இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நிர்மலா சீதாராமன் சாடியுள்ளார். ஆனால் மு.க.ஸ்டாலினை விமர்சிப்பதற்கு பதிலாக, உங்களுக்கு நேரம் இருந்தால் வேலையில்லா திண்டாட்டம், வேலையின்மை, பெருகிவரும் இந்தியாவின் கடன், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள், பசி, வறுமை, பெண்கள் மல்யுத்த வீரர்கள் குறித்து கவலைப்படுங்கள்' என பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.க. மற்றும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எதிரான இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்