< Back
தேசிய செய்திகள்
ஒர்லி கார் விபத்து; மிஹிர் ஷாவின் தந்தையை கட்சியில் இருந்து நீக்க ஷிண்டே உத்தரவு
தேசிய செய்திகள்

ஒர்லி கார் விபத்து; மிஹிர் ஷாவின் தந்தையை கட்சியில் இருந்து நீக்க ஷிண்டே உத்தரவு

தினத்தந்தி
|
10 July 2024 3:09 PM IST

சிவசேனா கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்து ஷாவின் தந்தை ராஜேஷ் ஷாவை நீக்கும்படி முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.

புனே,

மராட்டியத்தின் ஒர்லி நகரில் கொலிவாடா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் நகவா (வயது 50). இவருடைய மனைவி காவேரி நகவா (வயது 45). கடந்த ஞாயிற்று கிழமை காலை 5.30 மணியளவில் மனைவியுடன் மீன் வாங்க ஸ்கூட்டரில் சென்றபோது, பின்னால் வந்த பி.எம்.டபிள்யூ. கார் இவர்களுடைய ஸ்கூட்டர் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். பிரதீப் தரையில் விழுந்த நிலையில், காவேரி காரில் 100 மீட்டர் தொலைவு வரை இழுத்து செல்லப்பட்டார். அவர் பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காரை குடிபோதையில் ஓட்டி சென்றது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின் துணை தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் ஷா என்பவரின் மகன் மிஹிர் ஷா (வயது 24) என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

விபத்துக்கு பின் மிஹிர் ஷா தப்பியோடி விட்டார். இந்நிலையில், ராஜேஷ் ஷா மற்றும் அவருடைய கார் ஓட்டுநர் ராஜரிஷி ராஜேந்திர சிங் பிஜாவத் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த வழக்கில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், குற்றவாளியான மிஹிர் ஷாவை மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சூழலில், சிவசேனா கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்து ஷாவின் தந்தை ராஜேஷ் ஷாவை நீக்கும்படி முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டு உள்ளார்.

இதற்கு முன், கட்சியுடன் தொடர்புடையவரின் மகன் என்பதற்காக தண்டனையில் இருந்து மிஹிர் ஷா தப்பி விடவோ அல்லது அவருக்கு இரக்கம் காட்டவோ கூடாது என கூறி எதிர்க்கட்சிகள் அரசை இன்று வலியுறுத்தின.

இந்த வழக்கில், ராஜேஷ் ஷாவின் ஓட்டுநர் ராஜேந்திர சிங்கின் போலீஸ் காவலை நாளை (11-ந்தேதி) வரை நீட்டித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சம்பவத்தன்று, ஜுகுவில் உள்ள பார் ஒன்றில் மிஹிர் ஷா மதுபானம் குடித்து இருக்கிறார். அவர் வீடு திரும்பும்போது, ஓட்டுநரிடம் நீண்ட தொலைவுக்கு காரை ஓட்டி செல்லும்படி கூறியுள்ளார். கார் ஒர்லிக்கு வந்ததும், காரை ஓட்டுகிறேன் என மிஹிர் கூறியுள்ளார். அதன்பின்னர் காரை அதிவிரைவாக ஓட்டி சென்ற மிஹிர் ஸ்கூட்டர் மீது மோதியுள்ளார்.

இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது என கூறியுள்ள முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, சட்டம் அதன் கடமையை செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம். போலீசாரிடம் பேசியுள்ளேன். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி பார் உரிமையாளர் கரண் ஷா கூறும்போது, மிஹிர் ஷாவுடன் அவருடைய நண்பர்கள் 4 பேர் வந்தனர். அவர்கள் அனைவரும் பீர் குடித்த பின்னர் இயல்பான நிலையில் இருந்தனர் என்றார். சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் கைப்பற்றி சென்றுள்ளனர் என கூறினார்.

இந்நிலையில், விபத்து ஏற்படுத்திய மிஹிர் ஷா சென்ற, தனியார் மதுபான பாருக்கு கலால் துறையினர் சீல் வைத்து மூடியுள்ளனர்.

ஜுகுவில் உள்ள இந்த பாரின் உரிமையாளர்கள், கலால் துறையின் விதிகளை காற்றில் பறக்க விட்டனர் என்பது 2 நாள் விசாரணைக்கு பின்னர் தெரிய வந்ததும், இந்த பாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குடித்து விட்டு, வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கும்படி மும்பை போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பாரை மூடுவதற்கான காலக்கெடு மற்றும் கலால் துறை விதிகளை மீறும் பார்கள் மூடப்படுவதுடன், அவற்றின் உரிமங்கள் திரும்ப பெறப்படும் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விபத்து நடப்பதற்கு முன், நண்பர்களுடன் சேர்ந்து பாரில் மிஹிர் ஷா செலவிட்ட தொகை ரூ.18 ஆயிரம் என தெரிய வந்துள்ளது. அதற்கான பில் தொகையை மிஹிர் ஷாவின் நண்பர் செலுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்