உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: முதலிடம் பெற்ற 6 நாடுகள்.. 80-வது இடத்தில் இந்தியா
|இந்திய பாஸ்போர்ட் மூலம் மக்கள் விசா இன்றி 62 நாடுகளுக்கு பயணம் செய்யமுடியும்.
புதுடெல்லி:
உலகளவில் வலுவான மற்றும் பலவீனமான பாஸ்போர்ட்டுகள் குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற பாஸ்போர்ட்டுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன. இங்கு வசிப்பவர்கள் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் 193 நாடுகளுக்கான விசா இல்லா அணுகலுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தன.
ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டன. இந்த நாடுகளின் மக்கள் 192 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். இந்த பட்டியலில் சீனா 62-வது இடத்தைப் பிடித்தது. இந்தியா 80-வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் மக்கள் விசா இன்றி 62 நாடுகளுக்கு பயணம் செய்யமுடியும். கடைசி இடங்களில் பாகிஸ்தான் (101), ஈராக் (102), சிரியா (103), ஆப்கானிஸ்தான் (104) ஆகிய நாடுகள் உள்ளன.