உப்பள்ளியில் கத்தியால் குத்தி தொழிலாளி கொலை
|உப்பள்ளியில் கத்தியால் குத்தி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார்.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த கோகுல் ரோடு போலீஸ் சரகத்திற்குட்பட்ட சில்வர்டவுன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். அதே பகுதியில் இவர் புதிய கட்டிடம் ஒன்று கட்டி வருகிறார். இந்த கட்டிடத்தில் கூலி தொழிலாளியாக உத்தரகன்னடா மாவட்டம் முண்டுகோடு தாலுகா மரகடி கிராமத்தை சேர்ந்த மவுலாலி நசீர் சாப் (வயது 24) என்பவர் வேலை பார்த்து வந்தார். தினமும் இவர் வேலை முடிந்ததும் கட்டிடத்திலேயே தங்கிவிடுவார்.
இந்தநிலையில் நேற்று காலை கட்டிடத்தின் உரிமையாளர் சுரேஷ் சென்று பார்த்தபோது, மவுலாலி நசீர் சாப் கத்தியால் குத்தப்பட்டு இறந்துகிடந்தார்.
இதுகுறித்து கோகுல்ரோடு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்மநபர் யாரோ மவுலாலி நசீர் சாப்பை கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான மர்மநபரை தேடி வருகின்றனர்.