< Back
தேசிய செய்திகள்
காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி; வனத்துறை வாகனத்தை கவிழ்க்க முயன்றவர்கள் மீது தடியடி
தேசிய செய்திகள்

காட்டுயானை தாக்கி தொழிலாளி பலி; வனத்துறை வாகனத்தை கவிழ்க்க முயன்றவர்கள் மீது தடியடி

தினத்தந்தி
|
9 Sept 2022 9:09 PM IST

மூடிகெரே அருகே, காட்டுயானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்தார். அப்போது வனத்துறை வாகனத்தை கவிழ்க்க முயன்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

சிக்கமகளூரு;


கூலி தொழிலாளி

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா உருபகே கிராமத்தை சோ்ந்தவர் அர்ஜுன் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் நேற்று அருகே உள்ள கிராமத்தில் காபி தோட்டத்திற்கு வேலைக்காக சென்று இருந்தார். பின்னர் அவர் வேலையை முடித்து விட்டு திரும்பி நடந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் மூடிகெரே-கோனிபீடு சாலையில் வந்தபோது, அருகே இருந்த வனப்பகுதியில் இருந்து காட்டுயானை ஒன்று எதிரே வந்தது. காட்டுயானையை பாா்த்த அர்ஜுன் அதிா்ச்சி அடைந்தாா். உடனே அவர் உயிர் பிழைப்பதற்காக வேகமாக ஓட தொடங்கினார். அப்போது அவரை விரட்டி சென்ற காட்டுயானை தும்பிக்கையால் தாக்கியது. மேலும், அவரை தூக்கி வீசியது.

இதில் அவர் அருகில் இருந்த மரத்தில் மோதி கீேழ விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும், அந்த காட்டு யானை அவரை தரையில் போட்டு மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர், அந்த யானை அங்கிருந்து வனத்திற்குள் சென்றது.

போராட்டம்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள், கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். வனத்துறை அதிகாரிகள் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் காட்டுயானை தாக்கி உயிரிழந்த அர்ஜுன் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரியும், நிரந்தரமாக காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மூடிகெரேவில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பு அர்ஜுனின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

அப்போது வனத்துறையினர் அவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்கள் திடீரென அங்கு நிறுத்தியிருந்த வனத்துறை வாகனத்தை கவிழ்க்க முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே தகவல்அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மூடிகெரே போலீசார், லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதையடுத்து கிராமத்தினர் அர்ஜுனின் உடலை அங்கிருந்து எடுத்து சென்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்