மனைவியின் கள்ளத்தொடர்பால் நிகழ்ந்த விபரீதம்: மகன்களை கொன்று தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
|2 மகன்களை கொன்று தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோலார்,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனவாசப்பூர் தாலுகா சீகேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியின் மகன்கள் பவன் (12), நிதின் (10). இந்த நிலையில் லட்சுமிக்கும் அதேப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த நாராயணசாமி மனைவியை கண்டித்ததாக தெரிகிறது.
ஆனாலும் லட்சுமி கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதனால் நாராயணசாமி மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவரது மனைவி வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த நாராயணசாமி, தனது மனதை கல்லாக்கி கொண்டு 2 மகன்களையும் கொன்று உடல்களை தூக்கில் தொங்கவிட்டார்.
பின்னர் தானும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியின் கள்ளத்தொடர்பால் நாராயணசாமி தனது மகன்கள் பவன், நிதினை கொன்றுவிட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.