விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
|கள்ளக்காதலை கைவிட மனைவி மறுத்ததால் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வயாலிகாவல்:-
கள்ளத்தொடர்பு
பெங்களூரு வயாலிகாவல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார்(34). தொழிலாளியான இவருக்கும் நிர்மலா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். நிர்மலாவுக்கும், கிரண் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வினோத்குமாருக்கு தெரியவந்தது.
இதனால் அவர் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். கள்ளத்தொடர்பை மனைவி கைவிடாததால், மனமுடைந்த வினோத்குமார் கே.ஆர்.புரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நிர்மலா தனது கள்ளக்காதலனுடன் வெளியே சென்றபோது விபத்தில் சிக்கினார்.
இதையடுத்து அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அறிந்த வினோத் குமார், மனைவியை சந்திக்க ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது கள்ளத்தொடர்பு குறித்து அவர் மனைவியிடம் கேட்டு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் கள்ளக்காதலை கைவிட நிர்மலா மறுத்துவிட்டதாக தெரிகிறது. அந்த சமயத்தில் வினோத்குமார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
கொலை என புகார்
அதை தடுத்து நிறுத்திய பெண் வீட்டார், அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து அவரது குடும்பத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் வினோத்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வயாலிகாவல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது நிர்மலாவின் குடும்பத்தினர் தங்கள் மகனை கொன்று விட்டதாக வினோத்குமார் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வினோத்குமாரை, பெண் வீட்டார் கொலை செய்தனரா என்ற கோணத்தில் விசாரணையை நடத்தி வருகின்றனர்.