71 ஆயிரம் பேருக்கு பணி; பிரதமர் மோடிக்கு அரசு நிர்வாகம் பொழுதுபோக்காகி விட்டது: காங்கிரஸ் சாடல்
|அரசு அமைச்சகங்களில் 30 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன என்றும் பிரதமர் மோடிக்கு அரசு நிர்வாகம் பெரிய பொழுதுபோக்காகி விட்டது என்றும் காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் வேலை தேடும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் ரோஜ்கார் மேளா என்ற வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதியன்று பிரதமர் மோடி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.
இந்த திட்டம், இளைய தலைமுறையினரிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முறையும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசில் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள்.
இதன்படி, பிரதமர் மோடி மெய்நிகர் காட்சி வழியே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் 71 ஆயிரம் பேருக்கு, மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமனத்திற்கான ஆணைகள் அடங்கிய கடிதங்களை இன்று வழங்கினார்.
ரெயில்வே மேலாளர், ரெயில்வே நிலைய அதிகாரி, சீனியர் வணிகவியல் மற்றும் டிக்கெட் கிளார்க், ஆய்வாளர், உதவி இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், சுருக்கெழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள், அஞ்சல் உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள், வரி உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், செவிலியர்கள், நன்னடத்தை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
மேலும், புதிதாக பணி நியமனம் செய்யப்படுகிறவர்கள், 'கர்மயோகி பிரராம்ப்' என்கிற ஆன்லைன் பயிற்சியின் மூலம் பயிற்சி பெற்று கொண்டு பணியாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சியில் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள், மனித வள கொள்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று கூறும்போது, வேலைவாய்ப்பு என்ற பெயரில் மோடிஜி மீண்டும் பணி நியமன கடிதங்களை வினியோகித்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில், 50 ஆயிரம் கடிதங்கள் ரெயில்வே அமைச்சகத்தில் இருந்து மட்டுமே வந்துள்ளன. ரெயில்வே துறையில் 3.01 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. அரசு அமைச்சகங்களில் 30 லட்சம் காலி பணியிடங்கள் இருக்கின்றன.
இது மிக குறைவு, மிக தாமதம். ஒட்டு மொத்தத்தில் இது மோடி அரசின் 10-வது ஆண்டில் நடத்தப்படும் விளம்பர யுக்தி என குறிப்பிட்டு உள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேசும் இந்நிகழ்ச்சியில் மத்திய அரசை சாடியுள்ளார்.
அவர் கூறும்போது, பிரதமர் மோடிக்கு அரசு நிர்வாகம் பெரிய பொழுதுபோக்காகி விட்டது. கடந்த 9 ஆண்டுகளில் பல சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. உண்மையில் வேலை வாய்ப்பின்மைக்கான நினைவு சின்னங்களில் ஒன்றாக இந்த ரோஜ்கார் மேளா உள்ளது என அவர் கூறியுள்ளார்.