தேர்தல் பிரசார பாடலில் 'இந்து', 'ஜெய் பவானி' வார்த்தைகளை நீக்க முடியாது - உத்தவ் தாக்கரே
|கட்சியின் தேர்தல் பாடலில் இருந்து ‘இந்து’, ‘ஜெய் பவானி’ வார்த்தைகளை நீக்க முடியாது என தேர்தல் ஆணையம் நோட்டீசுக்கு உத்தவ் தாக்கரே பதில் அனுப்பி உள்ளார்.
மும்பை,
உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சிக்கு 'தீப்பந்தம்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சமீபத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி பிரசார பாடல் ஒன்றை வெளியிட்டது. அந்த பாடலில் 'இந்து', 'ஜெய் பவானி' போன்ற வார்த்தைகள் இடம்பெற்று உள்ளது குறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தேர்தல் ஆணைய நோட்டீஸ் தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
இந்து மதம் அல்லது கடவுளின் பெயரை சொல்ல நாங்கள் ஓட்டு கேட்கவில்லை. 'இந்து', 'ஜெய் பவானி' வார்த்தையை பயன்படுத்த கூடாது என கூறுவது மராட்டியத்தை அவமதிப்பது ஆகும். அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்கள் கூட்டங்களில் தொடர்ந்து 'ஜெய் பவானி', 'ஜெய் சிவாஜி' முழக்கங்கள் இடம்பெறும்.
தேர்தல் ஆணையம் எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், பிரதமா் மோடி கர்நாடகாவில் மக்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என கூறி வாக்குப்பதிவு எந்திரத்தை அழுத்துங்கள் என கூறியதற்கு எடுத்த நடவடிக்கை பற்றி எங்களிடம் கூற வேண்டும். இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டதா? என தேர்தல் ஆணையம் கூற வேண்டும். கடவுளின் பெயரை கூறி ஓட்டு கேட்பது சரியா?. இதுதொடர்பாக நாங்கள் அனுப்பிய கடிதங்களுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தால், இனிமேல் நாங்களும் எங்கள் கூட்டங்களில் ஹர ஹர மகாதேவ் என கூறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.