என்னுடைய மன்னிப்புக்காக பிரகலாத் ஜோஷி நீண்ட காலம் காத்திருக்கப் போகிறார் - மஹுவா மொய்த்ரா
|என்னுடைய மன்னிப்புக்காக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நீண்ட காலம் காத்திருக்கப் போகிறார் என்று மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மக்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா நேற்று உரையாற்றினார். அதானி விவகாரத்தில் அவரது பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் பலமுறை இடையூறு செய்தனர்.
அவரது பேச்சுக்குப் பிறகு, தெலுங்கு தேசம் கட்சி எம்பி கே ராம் மோகன் நாயுடு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, பாஜக எம்பி ரமேஷ் பிதுரியை மஹுவா மொய்த்ரா திட்டினார். அவர் சில கடுமையான வார்த்தைகளை உபயோகித்ததால், மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. பாஜக எம்பி ரமேஷ் பிதுரி குறித்து மஹுவா மொய்த்ரா சில நாடாளுமன்றத்திற்கு மாறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதைத் தொடர்ந்து, பாஜக எம்பிக்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பாஜக எம்.பி ஹேமமாலினி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் மரியாதைக்குரிய நபர் என்றும் அவர்கள் தங்கள் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். அவர்கள் அதிக உற்சாகம் மற்றும் உணர்ச்சிவசப்படக்கூடாது என்றும் கூறினார்.
இது தொடர்பாக மஹுவா மொய்த்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கூறியிருந்தார். மேலும் அவர், மொய்த்ரா மன்னிப்பு கேட்கவில்லையென்றால் அது அவர்களுடைய கலாச்சாரம் என்று கூறினார். இந்த நிலையில் இது தொடர்பாக என்னுடைய மன்னிப்புக்காக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நீண்ட காலம் காத்திருக்கப் போகிறார் என்று மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
பிரகலாத் ஜோஷி ஒரு மன்னிப்புக்காக நீண்ட காலம் காத்திருக்கப் போகிறார். ஏனென்றால் அவர், என்னை மன்னிப்பு கேட்க சொல்வதற்கு முன்பு, நேற்று ஒரு குரங்கு போல குதித்து, என் பேச்சைக் கெடுக்க முயன்றதைத் தவிர வேறொன்றும் செய்யாத 'அவ்வளவு மரியாதை இல்லாத' எம்பி ரமேஷ் பிதுரியை மன்னிப்பு கேட்க சொல்ல வேண்டும்.
என்னை மன்னிப்பு கேட்க சொல்லி வருவதற்கு முன்பு, அவர் முதலில் அவருடைய கட்சியைச் சேர்ந்த எம்பியை மன்னிப்பு கேட்க சொல்லி அவரது செயலை ஒழுங்கமைக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறு கூறினார்.