'பா.ஜனதாவின் மகளிர் இடஒதுக்கீடு, வெற்று வாக்குறுதிதான்' - பிரியங்கா காட்டம்
|பா.ஜனதாவின் மகளிர் இடஒதுக்கீடு, வெற்று வாக்குறுதிதான் என்று பிரியங்கா தெரிவித்தார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடி கோவில் ஒன்றுக்கு கொடுத்த நன்கொடை உறையை பிரித்து பார்த்தபோது அதில் வெறும் ரூ.21 மட்டுமே இருந்ததை டி.வி. செய்தியில் பார்த்ததாக கூறினார்.
இதனால் அதிருப்தி அடைந்த பா.ஜனதாவினர், பிரியங்கா மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் கமிஷனில் புகார் அளித்து உள்ளனர்.
இதற்கு பிரியங்கா நேற்று பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், 'எனது கருத்து ஒன்றால் பா.ஜனதாவினர் மிகுந்த கோபத்தில் உள்ளனர். பிரதமர் மோடி, தேவநாராயண் கோவிலுக்கு அளித்த நன்கொடை உறையில் ரூ.21 இருந்தது தொடர்பாக டி.வி.யில் பார்த்ததை தான் சொன்னேன்' என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அவர், 'பிரதமர் மோடி ஜியின் உறை காலியாக இருப்பதையே அவரது பணிகள் காட்டுகின்றன. மகளிர் இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் அனைத்தும் வெற்று வாக்குறுதிகள்தான். ஏனென்றால் மோடி ஜியின் உறை காலியாக உள்ளது' என்றும் காட்டமாக கூறியுள்ளார்.