மகளிர் இடஒதுக்கீடு மசோதா நமது காலத்தின் மிகப்பெரும் புரட்சி - ஜனாதிபதி திரவுபதி முர்மு
|மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளை கற்றுக்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.
புதுடெல்லி,
ஆசிய பசிபிக் அமைப்பின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-
"குடியரசின் தொடக்கத்திலிருந்தே நமது அரசியலமைப்பு சட்டம் வயது வந்தோருக்கு வாக்குரிமை அளித்தது. மேலும், பாலின நீதி, வாழ்க்கை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதில் பல அமைதியான புரட்சிகளை ஏற்படுத்த நமது ஜனநாயகம் நமக்கு உதவி இருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு குறைந்தபட்சம் 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தோம். மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இதேபோன்ற இடஒதுக்கீட்டை வழங்கும் திட்டம் இப்போது வடிவம் பெற்று வருகிறது.
பாலின நீதிக்கான நமது காலத்தின் மிகப்பெரும் புரட்சியாக இது இருக்கும். மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக உலகின் பிற பகுதிகளில் உள்ள சிறந்த நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்ள இந்தியா தயாராக உள்ளது."
இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.