சன்னகிரியில் காலிகுடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
|சன்னகிரியில் சரியான முறையில் குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பஞ்சாயத்து டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.
தாவணகெரே-
சன்னகிரியில் சரியான முறையில் குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பஞ்சாயத்து டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.
சரியான முறையில் குடிநீர் வினியோகம்
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு பொய்த்துபோனது. இதனால், மாநிலத்தில் உள்ள அணைகள், ஏரிகள், குளம், குட்டை நிரம்பவில்லை. மாநிலத்தில் உள்ள பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை தற்போதே ஏற்பட்டு உள்ளது. இந்தநிலையில், தாவணகெரே மாவட்டம் சன்னகிரியில் டவுன் பஞ்சாயத்து உள்ளது.
இந்த டவுன் பஞ்சாயத்தில் 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 15 வார்டுகளுக்கும் சூலைக்கரையில் உள்ள குளத்தில் இருந்து கொண்டு வந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக டவுன் பஞ்சாயத்தில் உள்ள 1, 2, 4 ஆகிய வார்டுகளில் சீரான குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
பொதுமக்கள் அவதி
மேலும் வாரத்திற்கு 2 நாட்கள் இந்த வார்டுகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்து அவர்கள் சன்னகிரி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தநிலையில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்றுமுன்தினம் சன்னகிரி டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை காலிகுடங்களுடன் முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், சன்னகிரி டவுன் பஞ்சாயத்தில் உள்ள 1, 2, 4 ஆகிய வார்டுகளில் கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் வழங்குவதில்லை. வாரத்திற்கு 2 முறை அல்லது ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை
இதனால் குழந்தைகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் அவதி அடைந்து வருகிறோம். இந்த 3 வார்டுகளுக்கும் சூலைகரையில் உள்ள குளத்தில் உள்ள தண்ணீரை வினியோகம் செய்து வந்தனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் சூலைகரை குளம் நிரம்பவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது பத்ரா ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு டவுன் பஞ்சாயத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
ஆனாலும் எங்களது வார்டுகளுக்கு குடிநீர் சரியாக கிடைப்பதில்லை. எனவே, இதற்கு டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டவுன் பஞ்சாயத்து கமிஷனர் ஹாலேஷ் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், தாவணகெரே மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவாக மழை பெய்துள்ளது.
அணைகள் நிரம்பவில்லை
இதனால், அணைகளில் நீர் நிரம்பவில்லை. மேலும் ஒரு சில அணைகளில் நீர் குறைவாக உள்ளது. எனவே குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சன்னகிரி டவுன் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் விரைவில் சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும், என்றார்.
அவரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.