உலகெங்கும் நம்முடைய குரலுக்கு மதிப்பும், மரியாதையும் உள்ளது - ராஜ்நாத் சிங் பேச்சு
|இந்தியாவின் பெருமை உலகெங்கும் பரவி வருகிறது.
புதுடெல்லி,
தற்போது முப்படைகளில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு மட்டும், பேறுகால சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன்படி, குழந்தை பேறுகால விடுமுறை, 180 நாட்கள் முழு சம்பளத்துடன் வழங்கப்படும். அதிகபட்சம், இரண்டு குழந்தைகளுக்கு இந்த சலுகையைப் பெறலாம். இதைத் தவிர, குழந்தையின் 18 வயது வரை, பணிக்காலத்தில், 360 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை சலுகை வழங்கப்படும். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் பெண் அதிகாரிகளுக்கு, 180 நாட்கள் தத்தெடுப்பு விடுமுறை சலுகை வழங்கப்படுகிறது. அதிகாரிகள் அளவில் உள்ள பெண்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த சலுகைகளை, முப்படைகளிலும் பணியாற்றும் அனைத்து நிலை பெண்களுக்கும் விரிவுபடுத்தி, மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், மத்திய பிரதேசத்தின், பிண்ட் மாவட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:
ஒரு காலத்தில், நம் நாட்டை மிகவும் வலுவில்லாத நாடாக, மற்ற நாடுகள் கருதின. தற்போது நிலைமை மாறியுள்ளது.உலகெங்கும் நம்முடைய குரலுக்கு மதிப்பும், மரியாதையும் உள்ளது. இந்தியாவின் பெருமை உலகெங்கும் பரவி வருகிறது.தற்போது மிகவும் வலுவான நாடாக மாறியுள்ளோம். இந்நிலையில், எல்லையில் நம்மிடம் வாலாட்டினால், அதற்கு தகுந்த பதிலடி தருவோம். தேவைப்பட்டால், எல்லையை தாண்டிச் சென்றும் பதில் தாக்குதல் நடத்துவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.