< Back
தேசிய செய்திகள்
அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழப்பு
தேசிய செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் உயிரிழப்பு

தினத்தந்தி
|
11 April 2024 7:46 AM IST

கேரள மாநிலம் சாலக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண் திடீரென இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

திருச்சூர்,

கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டம் மாளா அருகே பாரப்புரம் பகுதியை சேர்ந்தவர் சிஜோ. இவருடைய மனைவி நீது (வயது 31). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தொடர்ந்து கடந்த 8-ந் தேதி சாலக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மகப்பேறு சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் தாய், சேய் நலமாக இருந்ததால், இருவரையும் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நீது குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக சாலக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவருக்கு சில மணி நேரம் நினைவு திரும்பாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து அவரை உறவினர்கள் திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே நீது இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அறிந்த குடும்பத்தினர், உறவினர்கள் டாக்டரின் தவறான சிகிச்சையால் நீது இறந்து விட்டதாகவும், அறுவை சிகிச்சைக்காக தரப்பட்ட மயக்க மருந்தின் அளவில் ஏற்பட்ட தவறு காரணமாக இறந்து இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக கூறி சாலக்குடி போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் நீதுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரியில் வைத்து உள்ளனர். தொடர்ந்து நீதுவின் அறுவை சிகிச்சை ஆவணங்களை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்