கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பெண் பாலியல் பலாத்காரம் - ஊழியர் கைது
|கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பாலக்காடு,
கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகே மையன்னூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன் (வயது 55). இவர் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதற்கிைடயே ஆஸ்பத்திரியில் 36 வயது பெண் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதையடுத்து பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் வெளியே சென்ற போது, சசிதரன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அரை மயக்கத்தில் இருந்த பெண் இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கோழிக்காடு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சசிதரனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அறுவை சிகிச்சை முடிந்து அரை மயக்கத்தில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, சசிதரனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோழிக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளார்.