< Back
தேசிய செய்திகள்
நிற்காமல் சென்றதால் அரசு பஸ் மீது கல்வீச்சு; பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
தேசிய செய்திகள்

நிற்காமல் சென்றதால் அரசு பஸ் மீது கல்வீச்சு; பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

தினத்தந்தி
|
26 Jun 2023 8:47 PM GMT

இலவச பயண திட்டம் அமலில் உள்ள நிலையில் நிற்காமல் சென்றதால் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கிய பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு:

இலவச பயண திட்டம் அமலில் உள்ள நிலையில் நிற்காமல் சென்றதால் அரசு பஸ் மீது கல்வீசி தாக்கிய பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலவச பஸ் பயண திட்டம்

கர்நாடகத்தில், சொகுசு பஸ்களை தவிர இதர அனைத்து பஸ்களிலும் மாநிலம் முழுவதும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 11-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த ஒரு பெண், ஒரு அரசு பஸ் மீது கல்வீசியதால் அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

கோவிலுக்கு சென்ற பெண்

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் இலகல் அருகே பாப்பனஹள்ளியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் நேற்று முன்தினம் சில பெண்களுடன் லிங்காப்புராவில் உள்ள ஹுலிகம்மா அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்களை சில டிரைவர்கள் நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த லட்சுமி, அந்த வழியாக கொப்பலில் இருந்து விஜயாப்புரா மாவட்டம் ஒசப்பேட்டைக்கு சென்ற இடைநில்லா அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியுள்ளார். இதில் பஸ்சின் இடது பக்க ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ரூ.5 ஆயிரம் அபராதம்

இதைத்தொடர்ந்து அந்த பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் முத்தப்பா, லட்சுமி மற்றும் அவருடன் வந்தவர்களை பஸ்சில் ஏற்றிக்கொண்டு, நேராக முனிராபாத் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி முத்தப்பா போலீசில் புகார் அளித்தார்.

அதையடுத்து அரசு பஸ்சை சேதப்படுத்தியதற்காக ரூ.5 ஆயிரம் அபராதத்தை டிரைவரிடம் வழங்கும்படி போலீசார் லட்சுமியிடம் கூறினர். இதையடுத்து அவர் ரூ.5 ஆயிரத்தை டிரைவர் முத்தப்பாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

பரபரப்பு

இலவச பயண திட்டம் அமலுக்கு வந்த பிறகு பல இடங்களில் பஸ் நிறுத்தங்களில் பெண்கள் நின்றால், அரசு பஸ்களை நிறுத்துவதில்லை என்று பரவலாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், நிற்காமல் சென்றதால் அரசு பஸ் மீது கல்வீசிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்்தியுள்ளது. அரசு பஸ் மீது கல்வீசி தாக்கிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது போல், அரசு பஸ்களை பஸ் நிறுத்தங்களில் நிறுத்தாமல் செல்லும் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்