< Back
தேசிய செய்திகள்
வீட்டிற்குள் நுழைய முயன்ற கொள்ளையர்கள்... தனி ஆளாய் நின்று தடுத்து நிறுத்திய பெண் - பதைபதைக்கும் சி.சி.டி.வி. காட்சி
தேசிய செய்திகள்

வீட்டிற்குள் நுழைய முயன்ற கொள்ளையர்கள்... தனி ஆளாய் நின்று தடுத்து நிறுத்திய பெண் - பதைபதைக்கும் சி.சி.டி.வி. காட்சி

தினத்தந்தி
|
2 Oct 2024 7:00 PM IST

பஞ்சாப்பில் வீட்டிற்குள் நுழைய முயன்ற 3 கொள்ளையர்களை ஒரு பெண் தனியாக நின்று தடுத்து நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள வெர்க்கா பகுதியைச் சேர்ந்தவர் ஜக்ஜீத் சிங். நகை வியாபாரியான இவர் தனது மனைவி மந்தீப் கவுர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஜக்ஜீத் சிங் வீட்டில் இல்லாத சமயத்தில் முகமூடி அணிந்த 3 கொள்ளையர்கள் சுவர் ஏறி குதித்து அவரது வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்த மந்தீப் கவுர், கொள்ளையர்கள் சுவர் ஏறி குதிப்பதை பார்த்துவிட்டார். கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழையாமல் தடுப்பதற்காக அவர் உடனடியாக ஓடிச் சென்று வீட்டின் முன்பக்க கதவை மூட முயன்றார். அப்போது கொள்ளையர்கள் மூவரும் சேர்ந்து கதவை திறக்க முயற்சி செய்தனர்.

இருப்பினும் தனி ஆளாக நின்று போராடிய மந்தீப் கவுர், கதவை திறக்க விடாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். பின்னர் அருகில் இருந்த சோபாவை இழுத்து கதவோடு சேர்த்து வைத்து கொள்ளையர்களை உள்ளே வர விடாமல் தடுத்து நிறுத்தினார். இறுதிவரை ஒன்றும் செய்ய முடியாமல் கொள்ளையர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் முழுவதும் வீட்டின் வரவேற்பறையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளையர்களுடன் தங்கள் தாய் மந்தீப் கவுர் போராடிக் கொண்டிருப்பதை, அவரது குழந்தைகள் பதட்டத்துடன் பார்க்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்