ரீல்ஸ் ஆர்வத்தால் பறிபோன இன்னொரு உயிர்.. தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த பெண் ரெயில் மோதி மரணம்
|அதீத ஆர்வம் காரணமாக சிலர் ஆபத்தான இடங்களில் நின்றுகொண்டு மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோவை எடுத்து பதிவிடுகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் லைக்குகளை பெறுவதற்காகவும், பிரபலம் ஆவதற்காகவும் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவிடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்.
அதீத ஆர்வம் காரணமாக சிலர் உயிரைப் பணயம் வைத்து விதவிதமான ஸ்டண்டுகளை செய்தும், ஆபத்தான இடங்களில் நின்றுகொண்டும் மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோவை எடுத்து பதிவிடுகின்றனர். இதுபோன்ற முயற்சிகளின்போது பலர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன. எனினும், ஆர்வக்கோளாறு ஆர்வலர்கள் திருந்தியபாடில்லை.
இதற்கு உதாரணமாக, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டம், ரூர்க்கி அருகில் நடந்த விபத்தை குறிப்பிடலாம்.
பொறியியல் மாணவியான வைஷாலி (வயது 20), நேற்று மாலை ரகிம்பூர் ரெயில்வே கேட் அருகில் தண்டவாளத்தில் நின்றபடி செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அவரது தோழியும் உடனிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில், வைஷாலி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வைஷாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தோழி, உடனடியாக வைஷாலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.