கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை குத்திக் கொன்ற மனைவி கைது
|கணவனை குத்திக் கொன்ற மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
நொய்டா,
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கணவனை குத்திக் கொன்ற மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். மகேஷ் என்பவரது மனைவி பூஜா. இவர் பிரஹலாத் என்பவருடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்துள்ளார். இந்த நிலையில் மகேஷ் தனது குடும்பத்தினருடன் வேலைக்காக பிரோண்டா கிராமத்திற்குச் குடிபெயர்ந்துள்ளார். அங்கு அவர் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் பூஜா, பிரஹலாத்தையும் பிரோண்டாவுக்கு அழைத்துள்ளார். அங்கு அவருக்கு செக்யூரிட்டி வேலை வாங்கி கொடுத்துள்ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி இரவு மகேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் பிரஹலாத், பூஜாவை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீடு திரும்பிய மகேஷ் இருவரும் ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்போது ஏற்பட்ட மோதலில் பூஜாவும், பிரஹலாத்தும் சேர்ந்து கத்தரிக்கோலால் மகேஷை குத்திக் கொன்றனர். பின்னர் அவரது உடலை கழிவறையின் மேற்கூரையில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரையும் இன்று போலீசார் கைது செய்தனர்.