பலாத்கார சம்பவத்தில் சுயநினைவு இழந்த பெண்; சாட்சியற்ற வழக்கு... இறுதியில் சிக்கிய அக்காள் கணவர்
|மராட்டியத்தில் பலாத்காரத்தின்போது பெண் சுயநினைவு இழந்து, சாட்சியற்ற வழக்கான நிலையில், அக்காள் கணவர் சிக்கியுள்ளார்.
புனே,
மராட்டியத்தின் மும்பை நகரில் குடும்பத்துடன் வசித்து வரும் பெண் நள்ளிரவில் தனது 3 குழந்தைகளுடன் தூங்கி கொண்டு இருந்து உள்ளார். அவரது கணவர் ஒரு வேலையாக வெளியே போயுள்ளார்.
அவரது வீட்டுக்கு கதவு இல்லை. அதனால், மூங்கில் கம்புகளை கொண்டு தடுப்பு அமைத்து வைத்து உள்ளார். இந்த நிலையில், மர்ம நபர் ஒருவர் இரவில் வீட்டுக்குள் புகுந்து உள்ளார்.
சத்தம் கேட்டு அந்த பெண் எழுந்து உள்ளார். ஆனால், மர்ம நபர் பெண்ணின் வாய் மற்றும் தொண்டை பகுதியை அழுத்தி பிடித்து உள்ளார். இந்த தாக்குதலில், அந்த பெண் சுயநினைவை இழந்து உள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் கோர்ட்டில் பலாத்கார வழக்கு தொடர்ந்து உள்ளார். இதில், குற்றவாளி அந்த பெண்ணின் அக்காள் கணவர் என புகாரில் குற்றச்சாட்டாக கூறப்பட்டு உள்ளது.
அந்த நபரின் வழக்கறிஞர் கோர்ட்டில் கூறும்போது, அந்த பெண் சுயநினைவற்று போயுள்ளார். மின்சாரமும் இல்லை. அதனால், குற்றவாளியை அவரால் அடையாளம் காண முடியாது என வாதிட்டு உள்ளார்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மீரா சவுத்ரி, பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு பரிசோதனை முடிவுகளை கோர்ட்டில் சமர்ப்பித்து உள்ளார்.
அது குற்றவாளியான அக்காள் கணவருடன் ஒத்து போயுள்ளது. பெண்ணின் கழுத்தில் காயம் இருந்து உள்ளது என அவரை பரிசோதனை செய்த டாக்டரும் கூறியுள்ளார்.
இவற்றை எல்லாம் விசாரித்த கூடுதல் செசன்ஸ் நீதிபதி மாதுரி தேஷ்பாண்டே, மருத்துவ சான்று புகாரளித்த பெண்ணுக்கு ஆதரவாக உள்ளது. இந்த மரபணு பரிசோதனையே முடிவானது. குற்றவாளியின் செயலும் வெளிகாட்டப்பட்டு உள்ளது.
துல்லிய தன்மை அடிப்படையில் மரபணு பரிசோதனை முடிவு ஏற்று கொள்ளப்படுகிறது. விசாரணைக்கான ஒரு சிறந்த கருவியாகவும் எடுத்து கொள்ளப்படுகிறது. இந்த விவகாரத்தில் மரபணு பரிசோதனை ஈடு இணையற்றது என சுப்ரீம் கோர்ட்டு கூறிய உத்தரவையும் நீதிபதி குறிப்பிட்டார்.
2017-ம் ஆண்டு நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய இந்த வழக்கில், பெண்ணின் அக்காள் கணவரான 38 வயதுடைய நபருக்கு கோர்ட்டு தண்டனை விதித்து உள்ளது.
இந்த வழக்கில், டெய்லரான குற்றவாளி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஆனால், பெண்ணை கொல்வதற்கான நோக்கம் பற்றி நிரூபிக்க முடியாத சூழலில், அந்த குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.