கள்ளக்காதலை கணவர் கைவிட மறுத்ததால் குழந்தையை கொன்றுவிட்டு பெண் தற்கொலை
|தாவணகெரே அருகே கணவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் குழந்தையை கொன்றுவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு
தாவணகெரே அருகே கணவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் குழந்தையை கொன்றுவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்காதலை கைவிட மறுப்பு
தாவணகெரே மாவட்டம் ஜகலூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 28). இவர், மாநகராட்சி அலுவலகத்தில் துணை என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லிகிதா (22). இந்த தம்பதிக்கு பிறந்து 11 மாதங்களே ஆன ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் மனோஜ்குமாருக்கு, அவரது அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் 2 பேரும் அடிக்கடி தனியாக சந்தித்து பேசி உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கள்ளக்காதல் விவகாரம் லிகிதாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த லிகிதா, மனோஜ்குமாரிடம் கள்ளக்காதலை கைவிடும்படி கண்டித்துள்ளார். ஆனால் அதற்கு மனோஜ்குமார் செவிசாய்க்கவில்லை. இதுெதாடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனோஜ்குமார், லிகிதாவை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு மனோஜ்குமாரின் பெற்றோரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
குழந்தையை கொன்றுவிட்டு...
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான லிகிதா, தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது லிகிதா, தனது குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொலைசெய்துள்ளார். பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த ஜகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தற்கொலை செய்துகொண்ட லிகிதாவின் உடலையும், கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கணவர் கைது
விசாரணையில், கள்ளக்காதலை கணவர் கைவிட மறுத்ததுடன் கொடுமைப்படுத்தியதால் மனம் உடைந்த லிகிதா, குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து லிகிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் மனோஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.