உப்பள்ளியில் துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி பெண் கொலை
|உப்பள்ளியில் குடிபோதையில் துப்பட்டாவால் பெண்ணை கழுத்தை இறுக்கி கொலை செய்த அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உப்பள்ளி-
உப்பள்ளியில் குடிபோதையில் துப்பட்டாவால் பெண்ணை கழுத்தை இறுக்கி கொலை செய்த அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தகராறு
உப்பள்ளி கசபாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவயோகி ஹிரேமட் (வயது 28). இவரது மனைவி சுதா (24). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் சிவயோகி, மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானதாக தெரிகிறது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல், தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி சுதாவுடன் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடும்படி சுதாவும், சிவயோகியை கண்டித்து வந்துள்ளார்.
கழுத்தை இறுக்கி கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினமும் சிவயோகி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போதும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிவயோகி வீட்டில் இருந்த துப்பட்டாவை எடுத்து சுதாவின் கழுத்தை இறுக்கி உள்ளார். இதில் சுதா மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவயோகி, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும், கசபாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான சுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் வலைவீச்சு
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடிபோதையில் மனைவி சுதாவின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி சிவயோகி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிவயோகியை வலைவீசி தேடி வருகிறார்கள்.