3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
|உத்தரபிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 3 குழந்தைகள் பிணமக மிதப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
லக்னோ,
உத்தரபிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ளது நகர்பூர் கிராமம். இங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 3 குழந்தைகள் பிணமக மிதப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று அவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் விசாரணையில் இறங்கினர்.
முதல்கட்ட விசாரணையில், இளம்பெண் தனது குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
3 குழந்தைகளின் தாயான பரிமளாவின் கணவர் சோகன்லால் மும்பையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். அவரிடம், தன்னையும் குழந்தைகளையும் வேலை செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்லும்படி பரிமளா வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கணவர் மறுப்பு தெரிவித்து வந்ததால், 3 நாட்களுக்கு முன்பு, கணவர் வீட்டிலிருந்து புறப்பட்டு, தனது பெற்றோரின் வீட்டுக்கு பரிமளா வந்துள்ளார். இந்த நிலையில் அவர் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.