< Back
தேசிய செய்திகள்
ஆஸ்பத்திரிக்கு வெளியே குழந்தை பெற்றெடுத்த பெண் - அரியானாவில் பரபரப்பு
தேசிய செய்திகள்

ஆஸ்பத்திரிக்கு வெளியே குழந்தை பெற்றெடுத்த பெண் - அரியானாவில் பரபரப்பு

தினத்தந்தி
|
11 Jan 2024 2:20 AM GMT

இந்த சம்பவம் குறித்து மாநில சுகாதார மந்திரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அம்பாலா,

அரியானா மாநிலம் அம்பாலா நகரை சேர்ந்த 30 வயது பெண் சுமன். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு சுமனுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் ஷாலு குமார், சுமனை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரி அழைத்து செல்ல முயன்றார். ஆனால் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை.

அதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளுடன் இணைக்கப்பட்ட 3 சக்கர வாகனத்தில் சுமனை ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். மனைவியை வாகனத்திலேயே படுக்க வைத்துவிட்டு ஷாலு குமார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஊழியர்களிடம் உதவிக்கேட்டார். தனது மனைவியை பிரசவ வார்ட்டில் அனுமதிக்க வலியுறுத்தினார். ஆனால் ஊழியர்கள் அதை மறுத்துவிட்டனர். ஷாலு குமார் பலமுறை கெஞ்சிக் கேட்டும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் மனம் இரங்கவில்லை.

இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய ஷாலு குமார் ஆஸ்பத்திரிக்கு வெளியே வாகனத்தில் விட்டுவிட்டு வந்த மனைவியை பார்க்க ஓடினார். அப்போது சுமன் வாகனத்திலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்து, மயங்கி கிடந்தார். இதை பார்த்து ஷாலு குமார் கதறினார்.

இதுப்பற்றிய தகவல் ஆஸ்பத்திரியின் பிரசவ வார்ட்டில் இருந்த டாக்டருக்கு தெரியவர, அவர் உடனடியாக தாயையும், குழந்தையையும் பிரசவ வார்ட்டில் அனுமதித்து உரிய சிகிச்சை அளித்தார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர் தெரிவித்தார். இதனிடையே ஷாலு குமார் இந்த சம்பவம் குறித்து மாநில சுகாதார மந்திரியிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, அவர் இது குறித்து விசாரிக்க விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்