ரூ.19.79 கோடி போதைப்பொருளுடன் மும்பை ஏர்போர்ட்டில் சிக்கிய சியரா லியோன் நாட்டு பெண்
|காலணிகள், மாய்ஸ்சரைசர் பாட்டில், ஷாம்பு பாட்டில் போன்றவற்றில் மறைத்து போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளது.
மும்பை:
கென்யாவின் நைரோபியில் இருந்து மும்பை வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகள் தீவிரமாக சோதனையிடப்பட்டன.
ஒரு பெண் பயணியின் உடைமைகளை சோதனையிட்டபோது, அவர் ரூ.19.79 கோடி மதிப்பிலான கோகைன் என்ற போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், அவர் சியரா லியோன் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், நைரோபி வழியாக மும்பை வந்ததும் தெரியவந்தது.
இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அந்த பயணி கொண்டு வந்த காலணிகள், மாய்ஸ்சரைசர் பாட்டில், ஷாம்பு பாட்டில் போன்ற பொருட்கள் கனமாகவும் கடினமாகவும் இருப்பதை கவனித்தோம். அவற்றை சோதனையிட்டபோது, அதில் வெள்ளை நிற பவுடரை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அந்த பவுடரை சோதனை செய்தபோது, அது கோகைன் போதைப்பொருள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.