< Back
தேசிய செய்திகள்
பெண் டாக்டர் பலாத்காரம்-கொலை வழக்கு; பிரதமர் மோடிக்கு ஐ.எம்.ஏ. கோரிக்கை வைக்க முடிவு
தேசிய செய்திகள்

பெண் டாக்டர் பலாத்காரம்-கொலை வழக்கு; பிரதமர் மோடிக்கு ஐ.எம்.ஏ. கோரிக்கை வைக்க முடிவு

தினத்தந்தி
|
17 Aug 2024 4:43 PM IST

மேற்கு வங்காளத்தில், பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை விவகாரத்தில் நாங்கள், அடிப்படை உரிமையையே கேட்கிறோம் என ஐ.எம்.ஏ. தலைவர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். எனினும், இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருப்பதற்கான சான்றுகள் உள்ளன என கோர்ட்டில் பெண் டாக்டரின் பெற்றோர் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், போலீசாரிடம் இருந்து வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்கள் நாடு தழுவிய அளவில் மருத்துவ சேவைகளை வாபஸ் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டனர்.

இதன்படி, இன்று காலை 6 மணி தொடங்கி, நாளை காலை 6 மணி வரை சேவைகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்து உள்ளனர். இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டது. இந்த 24 மணிநேரத்தில், வழக்கம்போல் நடைபெறும் வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது. எனினும், பிற அத்தியாவசிய சேவைகள் மேற்கொள்ளப்படும் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுவது பற்றி கேட்டதற்கு பதிலளித்த இந்திய மருத்துவ கூட்டமைப்பின் (ஐ.எம்.ஏ.) தலைவர் அசோகன், ஆம், நாங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவோம். அவர் தலையிடுவதற்கான காலம் கனிந்துள்ளது என்றார்.

பிரதமர் மோடி, சுதந்திர தின உரையின்போது, பெண்கள் பாதுகாப்பு பற்றி குறிப்பிட்டார். இதனை முன்வைத்து பேசிய டாக்டர் அசோகன், இந்த விவகாரத்தில் அவர் கவனம் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த காரணம் ஒன்றே போதும் என்று கூறியுள்ளார்.

நாங்கள் மத்திய சுகாதார மந்திரியை சந்தித்தோம். அரசு இப்போது பதிலளிக்க வேண்டியுள்ளது. அரசியல்ரீதியாக அவர்கள் பதிலளிக்க கூடிய நிலையில் உள்ளனர். அதற்குமேல் நாங்கள் எதுவும் கேட்கவில்லை. நாங்கள், அடிப்படை உரிமையையே கேட்கிறோம். அது வாழ்க்கைக்கான உரிமை என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில், அநீதிக்கு எதிராக நாட்டின் ஒவ்வொரு பகுதியிலுள்ள டாக்டர்களும் ஒன்றிணைந்து துணை நிற்கின்றனர். நாடு முழுவதும் மருத்துவ தொழிலில் ஈடுபட்டுள்ளோர் ஒற்றுமையாக நிற்கின்றனர். தனியார், அரசு அல்லது கார்ப்பரேட் டாக்டர்கள் என அனைத்து பிரிவினரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் சர்வதேச அளவிலான கவனம் ஈர்க்கும் வகையில் செயல்படுகிறோம். ஏனெனில், இது பெண்கள் பாதுகாப்பு பற்றிய விவகாரம் ஆகும். எங்களுடைய டாக்டர்கள் என்றில்லாமல், பணியாற்ற கூடிய ஒட்டுமொத்த பெண்கள் வகுப்பிற்கானது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்