< Back
தேசிய செய்திகள்
பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; தொடர்ந்து பணிநிறுத்தம், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; தொடர்ந்து பணிநிறுத்தம், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள்

தினத்தந்தி
|
12 Sept 2024 2:17 PM IST

மேற்கு வங்காள சுகாதார துறை அலுவலகம் வெளியே 40 மணிநேரத்திற்கும் மேலாக டாக்டர்கள் தொடர்ந்து பணிநிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த வழக்கை போலீசார் விசாரித்த நிலையில், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவையடுத்து, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 34-வது நாளாக போராட்டம் தொடருகிறது. டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் கடந்த செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால், முதலில் எங்களுடைய கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். அதன்பின்னரே, எங்களுடைய பணிநிறுத்தம் பற்றி பரிசீலனை செய்வோம். இல்லையெனில், மருத்துவமனைகளில் இன்று காணப்படும் நிலைமைக்கு அரசே பொறுப்பேற்க நேரிடும் என டாக்டர்கள் கூறினர்.

இந்த சூழலில், மருத்துவர்களின் பொதுக்குழு கூட்டத்தின்போது, அதில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை விவகாரத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். அவர்களுக்கு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் வகையிலான தண்டனை வழங்கப்பட வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையாளர், அவருடைய பதவியில் இருந்து விலக வேண்டும் உள்ளிட்டவை தீர்மானங்களில் கூறப்பட்டு இருந்தன.

இதேபோன்று, சுகாதார துறையின் முதன்மை செயலாளர் நாராயண் ஸ்வரூப் நிகாம் மற்றும் அவருடைய 2 உதவி அலுவலர்கள் ஆகியோர் பதவி விலக வேண்டும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் முன் வைத்தனர்.

ஆனால் அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறாத சூழலில் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவது என டாக்டர்கள் முடிவு செய்தனர். இந்நிலையில், சால்ட் லேக் பகுதியில் அமைந்த மாநில சுகாதார துறையின் தலைமையகம், ஸ்வத்ய பவனுக்கு வெளியே டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, பாதுகாப்புக்காக போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். வாகன போக்குவரத்தும் ஒழுங்குப்படுத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி டாக்டர்களில் ஒருவர் கூறும்போது, எங்களுடைய போராட்டம் மற்றும் பணிநிறுத்தம் தொடரும். ஆனால், இதனை தொடருவதற்கு நாங்கள் விரும்பவில்லை. எங்களுடன் எந்தவித சந்திப்பும் நடத்த மாநில அரசு விரும்பவில்லை. இதில், எந்த அரசியல் பின்னணியும் இல்லை என கூறியுள்ளார்.

இளநிலை டாக்டர்களின் போராட்டம் 34-வது நாளாக தொடரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சுகாதார நலன் சார்ந்த சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. போராடும் டாக்டர்களை நேற்று மாலை 6 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்த வரும்படி அரசு அழைத்திருந்தது. இதற்காக, மேற்கு வங்காள தலைமை செயலாளர் மனோஜ் பண்ட் இ-மெயில் வழியே தகவல் தெரிவித்து உள்ளார்.

ஆனால், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அது நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். குறைந்தது 30 பேராவது பிரதிநிதிகளாக வரவேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை வைத்தனர். எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக கூறினர். எனினும், இந்த கோரிக்கை பற்றி அரசிடம் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை. இதனால், அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. மேற்கு வங்காள சுகாதார துறை அலுவலகத்திற்கு வெளியே 40 மணிநேரத்திற்கும் மேலாக டாக்டர்களின் பணிநிறுத்தம் மற்றும் போராட்டம் இன்றும் தொடருகிறது.

மேலும் செய்திகள்