பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; 5 டாக்டர்களுக்கு சி.பி.ஐ. சம்மன்
|மேற்கு வங்காளத்தில் பலாத்காரம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட பெண் டாக்டரின் வீட்டுக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் பெற்றோரின் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், போலீசாரிடம் இருந்து வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கொல்கத்தாவில் உள்ள சி.பி.ஐ.யின் சிறப்பு குற்ற பிரிவினர், மருத்துவர்கள் 5 பேர் மற்றும் மருத்துவ பணியாளர்களை ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட பெண் டாக்டரின் வீட்டுக்கு சென்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய சி.பி.ஐ. அதிகாரி ஒருவர், விசாரணை நடந்து வருகிறது. பெண் டாக்டரின் பெற்றோரின் வாக்குமூலங்களை நாங்கள் பெற்றுள்ளோம் என கூறியுள்ளார்.
இதற்கு முன் காங்கிரஸ் பெண் தலைவரான சுப்ரியா ஸ்ரீநாத், இந்த சம்பவத்தில் மேற்கு வங்காள அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
இந்த குற்ற செயலை மூடி மறைக்கும் முயற்சியில் ஏன் அரசு நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது? என்றும் அவர் கேட்டார். இது துரதிர்ஷ்டம் வாய்ந்தது. மக்கள் தொகையில் பாதியளவாக உள்ள பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே? நாட்டில் பெண்களுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.