< Back
தேசிய செய்திகள்
ஆந்திராவில் பெண் டாக்டர் தலை முடியை இழுத்து, தாக்கிய நோயாளி; அதிர்ச்சி சம்பவம்
தேசிய செய்திகள்

ஆந்திராவில் பெண் டாக்டர் தலை முடியை இழுத்து, தாக்கிய நோயாளி; அதிர்ச்சி சம்பவம்

தினத்தந்தி
|
28 Aug 2024 8:30 AM IST

ஆந்திர பிரதேசத்தில் பெண் டாக்டரை நோயாளி தாக்கிய விவகாரத்தில், வார்டில் இருந்த மற்ற டாக்டர்கள் உடனடியாக தலையிட்டு டாக்டரை காப்பாற்றினர்.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியில் ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் மையம் என்ற பெயரில் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், பலர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், நோயாளி ஒருவர் பெண் டாக்டரை கடுமையாக தாக்கிய சம்பவம் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக அந்த வார்டில் இருந்த மற்ற டாக்டர்கள் தலையிட்டு, அந்த நபரிடம் இருந்து பெண் டாக்டரை காப்பாற்றினர்.

இந்த சம்பவம் பற்றி அந்த மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் துணை வேந்தரான டாக்டர் ஆர்.வி. குமாருக்கு அந்த பெண் டாக்டர் எழுதியுள்ள கடிதத்தில், அவசர மருத்துவ துறையில் பணியில் இருந்தேன். அப்போது, பங்காரு ராஜு என்ற நோயாளி பின்னால் இருந்து வந்து, எதிர்பாராத வகையில் திடீரென தலைமுடியை பிடித்து இழுத்து, கட்டில் ஒன்றின் ஸ்டீல் தடியின் மீது மோதும்படி செய்து விட்டார். அப்போது, உதவிக்கு பாதுகாவலர்கள் யாரும் இல்லை

இது பணியிடங்களில் பாதுகாப்பு பற்றிய தீவிர கவலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த நோயாளி கையில் ஆயுதம் எதுவும் வைத்திருந்தால், நிலைமை மோசமடைந்திருக்கும் என தெரிவித்து உள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கொல்கத்தா நகரில் உள்ள பிரெசிடென்சி சிறையில் வி.ஐ.பி. வார்டில் சஞ்சய் ராய் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது.

இந்த சூழலில், ஆந்திர பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில், பெண் டாக்டரை சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் தாக்கியுள்ள விவகாரம் மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்