< Back
தேசிய செய்திகள்
காட்டுயானை தாக்கி பெண் பலி
தேசிய செய்திகள்

காட்டுயானை தாக்கி பெண் பலி

தினத்தந்தி
|
19 Aug 2023 3:35 AM IST

சக்லேஷ்புரா அருகே காட்டுயானை தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.

ஹாசன்:-

தாக்குதல்

ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா வடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா என்கிற பூர்ணிமா(வயது 37). இவருக்கு திருமணமாகி விட்டது. திருமணத்திற்கு பின் இவர் தனது கணவரின் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் தனது தாயை பார்ப்பதற்காக வடூர் கிராமத்திற்கு வந்தார்.

தனது தாயின் வீட்டில் இருந்த அவர், நேற்று முன்தினம் காலை 6.30 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு காட்டுயானை பூர்ணிமா மீது தாக்குதல் நடத்தியது. அவரை தும்பிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த பூர்ணிமா சம்பவ இடத்திலேயே பலியானார்.

காட்டுயானை தாக்கி பலி

இதுபற்றி அறிந்த பூர்ணிமாவின் குடும்பத்தினரும், கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பூர்ணிமாவின் உடலை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு காட்டுயானை வந்து சென்றதற்கான அடையாளங்கள் இருந்தது தெரியவந்தது.

மேலும் கால்நடை டாக்டரை வரவழைத்து பூர்ணிமாவின் உடலை பரிசோதித்து பார்த்தனர். அப்போது பூர்ணிமா, காட்டுயானை தாக்கி பலியானது உறுதியானது. இதையடுத்து வனத்துறையினர் பூர்ணிமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முற்றுகை

இதற்கிடையே வனத்துறையினரை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் யானை தாக்கி உயிரிழந்த பூர்ணிமாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும், காட்டுயானைகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் இதுபற்றி அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதையடுத்து வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். காட்டுயானை தாக்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்