ஓடும் ரெயிலில் இருந்து ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
|தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மங்களூரு,
கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூரு வழியாக பெங்களூரு நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் பண்ட்வால் அருகே பி.சி.ரோட்டில் நேத்ராவதி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
அந்த ரெயிலில் பயணித்த பெண் ஒருவர் தான் அமர்ந்து இருந்த இருக்கையில் தன்னுடைய பையை வைத்துவிட்டு வாசல் அருகே சென்றார். அப்போது திடீரென்று ஓடும் ரெயிலில் இருந்து அந்த பெண் நேத்ராவதி ஆற்றுக்குள் குதித்தார். இதனை பார்த்து அந்த ரெயிலில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உடனடியாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்கள் உதவியுடன் அந்த பெண்ணை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார். ஓடும் ரெயிலில் இருந்து குதித்தபோது தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் பை ரெயிலில் இருந்ததால், அதனை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பையில் இருந்த ஆதார் கார்டு அடிப்படையில் அந்த பெண் துமகூரு மாவட்டம் மதுகிரி தாலுகா படசலேஹட்டியை சேர்ந்த நயனா (27) என்பது தெரியவந்தது. அவர் ஓடும் ரெயிலில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ஆனால் அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து பண்ட்வால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.