< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

பெங்களூரு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
4 Oct 2023 3:34 AM IST

பிளிகிரிரங்கநாத சாமி கோவில் அருகே குடும்ப தகராறில் ஆள் இல்லாத வீட்டில் பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொள்ளேகால்:

பிளிகிரிரங்கநாத சாமி கோவில் அருகே குடும்ப தகராறில் ஆள் இல்லாத வீட்டில் பெங்களூருவை சேர்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூக்கில் பெண் பிணம்

சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா பிளிகிரிரங்க ணபெட்டாவில் உள்ள ரங்கநாத சாமி கோவில் அருகே வசித்து வருபவர் ரங்கநாத். இவர் கடந்த வாரம் குடும்பத்தினருடன் கனிகனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டின் வெளியே உள்ள மரத்தில் பெண் ஒருவர் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். வீட்டிற்கு திரும்பிய ரங்கநாத் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் இதுகுறித்து எலந்தூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எலந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் யார் என்பது தெரியவில்லை. யாரேனும் கொலை செய்தனரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பதில் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்து கொண்டார்

மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் போலீசாரின் விசாரணையில் அந்த பெண் பெங்களூருவை சேர்ந்த வினுதா என்று தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 27-ந் தேதி வினுதா வீட்டில் இருந்து வந்துள்ளார். பின்னர் பிளிகிரிரங்கநாதசாமி கோவிலுக்கு சென்ற வினுதா அங்கு சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து கோவிலில் இருந்து வெளியே வந்த வினுதா, ரங்கநாத்தின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த எலந்தூர் போலீசார் இதுகுறித்து குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அவர்களிடம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட வினுதாவின் உடலை ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் பிளிகிரிரங்கயபெட்டா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்