< Back
தேசிய செய்திகள்
மத்திய நிதி மந்திரி, ரிசர்வ் வங்கி பெயர்களை பயன்படுத்தி கடன் தருவதாக ரூ.2 கோடி மோசடி; பெண் உள்பட 6 பேர் கைது
தேசிய செய்திகள்

மத்திய நிதி மந்திரி, ரிசர்வ் வங்கி பெயர்களை பயன்படுத்தி கடன் தருவதாக ரூ.2 கோடி மோசடி; பெண் உள்பட 6 பேர் கைது

தினத்தந்தி
|
9 Feb 2024 5:41 PM IST

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி பெயர்களை பயன்படுத்தி கடன் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்த பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் பகுதிகளில் புளூ விங்க்ஸ் எனப்படும் அறக்கட்டளை செயல்பட்டு வந்தது.

அந்த நிறுவனம் மத்திய அரசு சார்பில் நிதித்துறையின் கீழ் ரூ.17 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிதியை மானிய முறையில் பொதுமக்களுக்கு கடனாக வழங்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இதற்காக தங்கள் நிறுவனத்தில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறது.

இதை நம்பி ஆனேக்கல் தாலுகா மட்டும் இன்றி தமிழக எல்லைப்பகுதிகளான ஓசூர் உள்ளிட்ட இடங்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் அறக்கட்டளையில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்தனர்.

ரூ.2 கோடி வரை அறக்கட்டளையில் டெபாசிட் செய்யப்பட்டது. எனினும் அவர்களுக்கு பலமாதங்கள் ஆகியும் டெபாசிட் தொகையோ, மானிய தொகையை விடுவிக்கப்படவில்லை . இதையடுத்து பணத்தை செலுத்தி ஏமாந்தவர்கள் சூர்யாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீஸ் விசாரணையின் ஓசூரை சேர்ந்த பவித்ரா , தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மத்திய நிதி மந்திரி நிர்மலாசீதாராமன் தவிர ரிசர்வ் வங்கி போன்ற நிதி சார்ந்த ஆதாரங்களை பயன்படுத்தி மானியத்துக்கு கடன் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளார்.

இதை நம்பிய பலரும் அறக்கட்டளையில் பணத்தை டெபாசிட் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பவித்ரா, மஞ்சுளா, அமலேஷ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்கவும் தனிப்படை போலீசார் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்