கணவரை தாக்கிய கரடிகளை கோடரியால் அடித்து விரட்டிய பெண்
|ஹாவேரி அருகே கணவரை தாக்கிய கரடிகளை கோடரியால் அடித்து பெண் விரட்டியடித்தார். இதில் ஒரு கரடி செத்துப்போனதால் அவரிடம் வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
பெங்களூரு:
ஹாவேரி அருகே கணவரை தாக்கிய கரடிகளை கோடரியால் அடித்து பெண் விரட்டியடித்தார். இதில் ஒரு கரடி செத்துப்போனதால் அவரிடம் வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
விவசாய தம்பதி
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் சிக்காவி தாலுகாவில் உள்ள முண்டகொடா கிராமத்தை சேர்ந்தவர் பஷீர் ஷாப் சவதத்தி. இவரது மனைவி ஷபீனா. இவர் கோணங்கேரி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார். இவர்களுக்கு பாசனகட்டி பகுதியில் விளை நிலம் உள்ளது. இது வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை பசீர் ஷாப் சவதத்தியும், அவரது மனைவி ஷபீனாவும் தங்களது விளை நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
கரடிகள் தாக்கின
அப்போது அவரது தோட்டத்திற்குள் 2 பெண், ஒரு ஆண் கரடிகள் புகுந்துள்ளன. இதை பார்த்ததும் அவர் தப்பிக்க முயன்றார். அப்போது 3 கரடிகளும் அவரை தாக்கியுள்ளன. இதனால் கரடிகளிடம் இருந்து தப்பிக்க முயன்றார். இருப்பினும் முடியவில்லை.
பசீர் ஷாப் சவதத்தியின் அலறல் சத்தம் கேட்டு அவரது பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ரஷாக் நலபண்டா என்பவர் அங்கு ஓடி வந்து பசீர் ஷாப் சவதத்தியை, கரடிகளிடம் இருந்து காப்பாற்ற முயன்றுள்ளார்.
விரட்டியடித்த பெண்
இதனால் அவரையும் கரடிகள் தாக்கின. இதில் கரடிகள் பசீல் ஷாப் சவதத்தியை கொடூரமாக தாக்கின. இதை பார்த்து முதலில் செய்வதறியாது நின்ற ஷபீனா, பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அங்கிருந்த கோடரியால் கரடிகளை தாக்கினார். இதில் ஒரு கரடியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 3 கரடிகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தப்பி ஓடின.
இதையடுத்து கரடிகள் தாக்கியதில் காயமடைந்த 2 பேரையும், பொதுமக்கள் உதவியுடன் ஷபீனா மீட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரு கரடி செத்தது
இந்த நிலையில், ஷபீனா தாக்கியதில் பலத்த காயமடைந்த கரடி நேற்று முன்தினம் மாலை வனப்பகுதிக்குள் செத்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று, செத்துப்போன கரடி உடலை மீட்டு கால்நடை மருத்துவர் உதவியுடன் பிரேதப் பரிசோதனை செய்தனர்.
பின்னர் அதே பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். மேலும் ஷபீனாவிடமும், அவரது கணவரிடமும் வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
வனத்துறையினர் விசாரணை
அப்போது அவர், தனது கணவரை கரடிகள் பயங்கரமாக தாக்கின. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், கோடரியால் கரடிகளை விரட்டியடித்தேன். இதில் காயமடைந்த ஒரு கரடி இறந்துவிட்டது. எனது கணவரின் உயிருக்கு முன்னால், கரடியை தாக்கியது தவறில்லை என நினைத்தேன் என்றார். ஆனால் வனவிலங்குகளை கொல்வது வனத்துறை சட்டப்படி குற்றம் என்பதால் அவரிடம் வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவரை தாக்கிய கரடியை பெண் கோடரியால் தாக்கி விரட்டியடித்த சம்பவமும், இதில் ஒரு கரடி செத்துப்போன சம்பவமும் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.