கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் மண்எண்ணெய் ஊற்றி பெண் எரித்து கொலை; கணவர்-மாமியார் கைது
|கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் மண்எண்ணெய் ஊற்றி பெண்ணை எரித்து கொலை செய்த அவரது கணவர், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
மைசூரு:
வரதட்சணை கொடுமை
மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகா சாலிகிராமம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 24). இவரது கணவர் ஹரீஷ். இவர்கள் இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்காக ஹரீசுக்கு ராஜேஸ்வரி குடும்பத்தினர் பணம், நகை வரதட்சணை கொடுத்தனர். கணவன்-மனைவி இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜேஸ்வரியிடம் கணவர் குடும்பத்தினர் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். மேலும் அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து ராஜேஸ்வரி போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், ஹரீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
எரித்து கொலை
இதையடுத்து சிறிது காலம் அமைதியாக இருந்த ஹரீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர், மீண்டும் ராஜேஸ்வரியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். ஆனால் ராேஜஸ்வரி கூடுதல் வரதட்சணை வாங்கி வர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ஹரீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜேஸ்வரி மீது ஹரீஷ் மற்றும் அவரது தாய் சந்திரகலா ஆகியோர் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தனர். இதில் உடலில் தீப்பிடித்து ராஜேஸ்வரி அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ராஜேஸ்வரியின் உடலில் பிடித்த தீயை அணைத்து அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பலத்த தீக்காயம் அடைந்த ராேஜஸ்வரி, தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
கணவர்-மாமியார் கைது
இதுகுறித்து சாலிகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரியை எரித்து கொன்ற அவரது கணவர் ஹரீஷ், மாமியார் சந்திரகலா ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.