< Back
தேசிய செய்திகள்
பணத்தகராறில் பெண் அடித்து கொலை; வியாபாரி கைது
தேசிய செய்திகள்

பணத்தகராறில் பெண் அடித்து கொலை; வியாபாரி கைது

தினத்தந்தி
|
10 Sept 2022 8:37 PM IST

பணத்தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார். இவர்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

மைசூரு;

காய்கறி வியாபாரி

மைசூரு டவுன் சர்தார் வல்லபாய் படேல் நகர் பகுதியில் வசித்து வருபவர் பாக்யா (வயது 42). இவர் தனது கணவரை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார். அதேப்பகுதியை சேர்ந்தவர் ராசப்பா (வயது 48). இவருக்கும் மனைவி இல்லை என தெரிகிறது.

இந்த நிலையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் தாலி கட்டாமலேயே வாழ முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதில் பாக்யா கூலி வேலை செய்து வந்தார். மேலும் ராசப்பா மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

அடித்து கொலை

இருவரும் சில மாதங்களாக சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி பண விஷயம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ராசப்பா, பாக்யாவை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் மயங்கி விழுந்த பாக்யா, சுயநினைவை இழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராசப்பா, அவரது முகத்தில் தண்ணீர் தெளித்துள்ளார். ஆனாலும் அவர் எழுந்திருக்கவில்லை.

இதையடுத்து ராசப்பா, அவரை மீட்டு மைசூரு ேக.ஆர். ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வியாபாரி கைது

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆலனஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, திருமணம் செய்துகொள்ளாமல் பாக்யாவும், ராசப்பாவும் வாழ்ந்து வந்ததும், பணத்தகராறில் பாக்யாவை, ராசப்பா அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து ஆலனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசப்பாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்