கடன் தவணைத்தொகையை செலுத்தத் தவறியதால் பெண் அடித்துக்கொலை - 4 பேர் கைது
|பீகாரில் கடன் தவணைத்தொகையை செலுத்தத் தவறியதால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலம் கதிகாரில் கடன் தவணைத்தொகையை செலுத்தத் தவறியதால் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக கடந்த செப்டம்பர் 18-ம் தேதி உயிரிழந்த பெண்ணுக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று, தவணைத்தொகையை செலுத்தத் தவறியதால் கடன் கொடுத்தவர்கள் அதற்கு பதிலாக செல்போனை கொடுக்க வேண்டும் என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர்.
இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்படவே கடன் கொடுத்தவர்கள் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் இந்த தாக்குதலில் அந்த பெண்ணின் மகளுக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் பால்கா காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிகார் சதார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.