பெண் அடித்து கொலை
|வீட்டின் அருகே மாட்டு சானம் குவித்ததால் ஏற்பட்ட தகராறில், பெண் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பக்கத்து வீட்டினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவமொக்கா:-
மாட்டு சானம்
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா அரளிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பேமிதா பானு (வயது 55). இவர் தனது மகனுடன் வசித்து வந்தார். இவர்கள் மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் தங்கள் மாடுகளின் சானத்தை வீட்டின் அருகில் பள்ளம் தோண்டி அதில் குவித்து வந்தனர்.
மாட்டு சானத்தால் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அகமது குடும்பத்தினர் அவதி அடைந்தனர். மழை காலங்களில் குவித்து வைத்த சானம் மழைநீருடன் சேர்ந்து அவர்களது வீட்டின் முன்பு ஆறுபோல் ஓடி உள்ளது. ேமலும், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியது
இதனால் இருவீட்டாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அகமதுவின் மனைவி மற்றும் அவரது சகோதரி இருவரும் சேர்ந்து பேமிதா பானுவிடம் இதுகுறித்து கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாட்டு சானத்தை அந்த பகுதியில் சேமிக்காமல், வேறு எங்காவது கொண்டுபோய் போடுமாறு கூறி உள்ளார்.
அப்போது இருவீட்டாருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றி உள்ளது. அந்த சமயத்தில் அகமதுவின் குடும்பத்தினர் பேமிதா பானுவை தாக்கி உள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்து கீழே விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் பேமிதா பானுவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
கொலை வழக்கு
இதுகுறித்து பத்ராவதி புறநகர் போலீசார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பேமிதா பானு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும் அகமதுவின் மனைவி மற்றும் சகோதரியிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மாட்டு சானம் குவித்ததில் ஏற்பட்ட தகராறில் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.