ஆண் நண்பருடன் சேர்ந்து ரூ.1.25 லட்சம் மோசடி செய்த பெண் கைது
|ஆண் நண்பருடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக அந்த பெண் நகை, பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.
புதுச்சேரி,
புதுச்சேரியில், வீடு கட்ட வங்கியில் லோன் வாங்கித் தருவதாக கூறி ஆண் நண்பருடன் சேர்ந்து ரூ.1.25 லட்சம் மற்றும் 22 சவரன் தங்க நகைகளை பெற்று மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் ஹவுஸ்கீப்பிங் பணி செய்துவரும் முதலியார்பேட்டை திரு.வி.க. நகரைச் சேர்ந்த ரஞ்சினிக்கு அதே நிறுவனத்தில் பணிபுரியும் சத்யவதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுய உதவிக்குழுவில் வீடுகட்ட 22 லட்சம் கடன் வாங்கி தருவதாகக் கூறிய சத்யவதி தனது ஆண் நண்பரான செந்தில்குமாருடன் சேர்ந்து ரஞ்சினியிடம் முன்பணமாக ரூ.1.25 லட்சமும், சிறிது சிறிதாக 22 சவரன் தங்க நகைகள் வரையும், இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பெற்று ஏமாற்றியுள்ளார்.
பணத்தை பெற்று ஏமாற்றிவிட்டதாகவும், அதனை திருப்பி கேட்டால் தன்னை மிரட்டுவதாகவும் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் ரஞ்சினி புகாரளித்தார். தொடர்ந்து, சத்தியவதியை கைது செய்த போலீசார், தலைமறைவாகவுள்ள அவரது ஆண் நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சத்தியவதி, ஆண் நண்பருடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக நகை, பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.